03 April 2006

முதலிலேயே நன்றி நவிலல்!

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது என்பார்கள்! சரிதான்!அதாவது என் கணக்குப்படி, நான் ஐந்தாவது பிள்ளை. எதற்கும் ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்ந்ததில்லை! எதற்கும் சாதாரணமாக வளைந்து கொடுக்க மாட்டேன்! அதனால், பதில், அதனோடு அடி இரண்டும் கலந்து கட்டி கிடைத்திருக்கின்றன! இன்னும், என்னுள் கேட்டு, உலகத்தைக் கேட்டு, பதிவுகளில் கேட்டு, என் தேடுதல் இன்றும் தொடர்கிறது. அதன் விழைவே, நான் எழுத முயல்வது.
எனக்குத் தமிழ் ஆர்வம் வரக் காரணம்?

மார்கழி மாதம், வீட்டிலும், கோயிலிலும் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடப்போனதாலா? இல்லை திருக்குறளை அழகாகப் பிரித்துக் கூறி தமிழைப் புரிய வைத்த கமலா டீச்சர் காரணமா?ஐந்தாம் வகுப்பு படிக்கையில் குழந்தைப் புத்தகம் கோகுலத்தில் வந்த ஒரு பாட்டைக் கண்டு லயித்து, அதை நான் எழுதியதாகச் சொல்லி பின்னர் குட்டு வெளிப்பட்டு எல்லாரும் சிரித்ததாலா?

வானொலியில் கம்பர் விழா கேட்கமட்டும் லீவு போட அனுமதித்த அம்மாவினாலா? இல்லை கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுவது போல், தாத்தாவின் தம்பி, கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியின் பாடல்களைக் கேட்டு, கேட்டுத் தெளிந்ததாலா? தெரியாது! ஆனால், கவிதை போட்டியாகட்டும், கல்லூரி நாட்களில் கட்டுரை ஆகட்டும், என்னை கொஞ்சம் தன்னம்பிக்கைக்குர்¢யவன் ஆக்கியது, தமிழ்!

கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கையில் ஆனந்த விகடன், ஜுனியர் விகடனுக்கான மதுரை மாவட்டத்து நிருபர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட மூவருள் ஒருவனாக்கியதும், அதில் சிறப்பு நிருபர் விருது வாங்கச் செய்ததும், என்னுள் ஒளிந்திருந்த தமிழே! மற்ற இருவர், கல்பனா, மற்றும் இன்று சமீபத்தில் வெளிவரவிருக்கிற "திருட்டுப்பயலே" (திட்டலைங்க, அது திரைப்படத்து பேருங்க!) வின் இயக்குனர், சுகி.கணேசனான அன்றைய சு.கணேசன்!

வேலை நிமித்தம் 15 ஆண்டுகள் வடமாநிலங்களில் இருந்த என்னை கொஞ்சம் சுவாசிக்க வைத்தது, அவ்வப்போது கேட்ட அரட்டை அரங்கமும், தமிழ் சங்கத்தில் நடக்கும் விழாக்களுமே!

மீண்டும், தமிழகத்தில் வந்து வேலை செய்வேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை!! அதுவும் அதோடு, மீண்டும் என்னுள் வசந்தம் வரும், தமிழில் தினமும் எழுதுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை!

நீண்ட நாட்களாக மனதில் ஓடிய கருவே, முதன் முதலில் நான் பதிவு செய்த அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடங்கள்!! சக மனிதன் சொல்லி கேட்காததையா, பொருட்கள் சொல்லிக் கேட்கப்போகிறான் மனிதன்? இருந்தாலும், வாய் பேசா ஜடப்பொருட்களே நமக்கு பல வாழ்வியல் பாடத்தை சொல்கிறது என்றால், வாயுள்ள நாம் எத்தனை தேர்ச்சி பெறவேண்டும்? மனதில் தோன்றிய சில கவிதைகளை என் வீட்டிலேயே உள்ள கவிஞர் குழாம் (ஆமாம்; நிஜம்! என் தாய் மாமன் வெங்கடரெங்கன், எனது பெரிய மாமா பெண் பேராசிரியையும் பிரபல நவீன கவிதாயினியான் ரெங்கநாயகி, மற்றும் எனது சகோதரிகள், தாயார் போன்றோர்) முன் வைத்தேன். முதன் முதலில் அவர்கள் அங்கீகாரம் கிடைக்கப் பெற்று அதிக ஓட்டு பெற்ற அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடல் - விளக்கு!!

http://maraboorjc.blogspot.com/2006/04/2.html

ஒரு வேளை ஒண்ணும் விளங்கவில்லையென்று, "விளக்கு" என்று சொல்லிவிட்டார்களோ?!நான் என் கவிதையைத் தேர்ந்தெடுத்ததாக நினைத்துவிட்டேனோ?) கவிதையை மூடிவைக்கப் போனேன்! ரெங்கநாயகிதான் என்னை அழைத்து, "டேய், நீ ஏன் இணையத்தில் எழுதக்கூடாது?" என்றார். தமிழிலா? அவரே எனக்கு "பதிவுகள்" இணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அதில் எனது கவிதைகளைப் போடச்சொன்னார். அவர்களுக்கு நன்றி.

எல்லாரும் முடிவில் நன்றி நவில்வார்கள். எழுந்து சென்றுவிடும் கூட்டத்துக்கு சொல்வதை விட, நட்சத்திர பேச்சாளர் பேச்சை கேட்க ஆவலாய் இருக்கும் கூட்டத்துக்கு தமிழ்மண அன்பர்களை ஒப்பிட்டு, எனது நன்றிகளை முதல் நட்சத்திரப் பதிவிலேயே சொல்லிவிடுகிறேன்.
திரு.மாலனுக்கு அவர் மதுரை திருநகரில், தனது தமக்கையாரின் வீட்டுக்கு வருவதைப் பற்றியும், அப்போது அவர் பேசும் செய்திகளை நான் கேட்டதாகவும் குறிப்பிட்டு, எப்படி இணையத்தில் எழுதவேண்டும் எனக் கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்; அத்தனை வேலைகளுக்கும் நடுவே, தனது ஆரம்ப வாழ்க்கை நிகழ்வுகளை நான் எழுதியது கண்டு மகிழ்வதாகவும், கவிதைகள் நன்கு உள்ளதாகவும், அவரும், திண்ணை, பதிவுகள், போன்றவற்றில் எழுதலாம் என்றும் குறிப்பிட்டு எழுதினார். அதோடு, யுனிகோடில் தமிழ் பதித்தால், மேலும் பல இணையங்களில் எழுதலாம் என்று சொன்னார். யுனிகோடைப் பற்றி விளக்கம் கேட்டு, மறுபடியும் அவருக்கு எழுதினேன். அவர் மீண்டும் பொறுமையாக, தமிழ்மணத்தை பற்றி குறிப்பிட்டு, அதில், எப்படி யுனிக்கோடில் பதிவது என எழுதியுள்ளதையும் குறிப்பிட்டார். அவருக்கு என் நன்றி.

முதலில் திருப்பதியில் மொட்டை தேடுவது போல் நுழைந்த நான், காசி ஆறுமுகம் அவர்களின் "உன்கோடு, தனிக்கோடு"- கண்டு தேன் குடித்த வண்டானேன்! எனக்கு தெரிந்த அத்தனை தமிழ் ஆர்வலர்களுக்கும் அந்த urlஐ அனுப்பி, படிக்கச் செய்தேன்! அந்த கடினமான விஷயத்தை, தேனில் தடவிக் கொடுக்கும் மருந்தைப் போல் அழகாக ஊட்டியிருந்தார் அவர். நேரில் பார்க்காமலே, அவரது அபரித ரசிகனானேன். என்னடா இவன் அடிக்கடி தேன் பற்றி சொல்கிறானே, என்று என்னை நரி ஆக்கிவிடாதீர்கள்!

பின்னர் மாலை நேரங்களில் சுரதா, முரசு அஞ்சல் போன்றவற்றின் உதவியோடு, தமிழ் எழுதிப்பழகி, மெல்ல மெல்ல தமிழ் மணத்துள் எட்டிப்பார்த்தேன்.

முதலில் பதித்த அத்தனையும் அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடங்கள்!! ஆனால், அவற்றுக்கு மிக சில பின்னூட்டங்களே வந்தன. ஆனால், பின்னூட்டங்களை எப்படி பதிவுகளில் காணச்செய்யவேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. மீண்டும், காசி அவர்களுக்கு அஞ்சல் எழுதி, எப்படி, மட்டுறுத்தல் செய்வது என்று தெரிந்து கொண்டேன். காசி அவர்களுக்கு "கண்ணாயிரம்" (கைதி இல்லப்பா) எனச் செல்லப் பெயர் வைக்கலாம்! எப்படித்தான் அத்தனை பேருக்கும் கடிதம் வந்த வேகத்திலேயே, அவரால் சரியான பதிலை, உடனுக்குடன் அனுப்பி வைக்க முடிகிறதோ? அந்த அந்நியோன்னியம் நிறைந்த தகவல் செறிவுள்ள கடிதங்கள் எழுதி என்னைச் செம்மை படுத்திய காசி அவர்களுக்கு நன்றி.

பல அன்பர்கள் கூறுவது போல், எப்படி அதிகமான பின்னூட்டங்களைப் பெறுவது என மனம் தவித்தது உண்மை. ஆனால், சிலரது செய்திகள் படித்தபின், அந்த செய்திகள் மறுநாளே பழைய விஷயமாகிவிடுவதும், மீண்டும் படிக்கத் தூண்டுமா, அல்லது, மறக்கப்படுமா என்று ஒரு கேள்வி என்னும் எழுந்தது. SLANDEROUS, SCANDALOUS, SLEAZE என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படிப் பட்டதை எழுதக் கூடாது என்று உறுதி கொண்டேன். என்று படித்தாலும், யாருக்கேனும், ஒரு புதிய தகவலோ, ஒரு நெறியோ, ஒரு நல்ல விஷயமோ தருவதாக இருந்தால்தான், அச்செய்தி காலத்தால் அழியாததாகும்; அப்படிபட்ட விஷயங்களையே எழுதவேண்டும் என்று என்னுள் ஒரு கோட்பாடு வைத்துக்கொண்டேன். பின்னூட்டங்களை விட, என் மனம் எதைப்பற்றி என்னை எழுதவைக்கிறதோ, அதையே நான் எழுத விழைகிறேன்.
மற்றவர் பதிவுகளை முடிந்த மட்டும் படிப்பேன். ஒரு முறை சாதி குறித்து, தவறான செய்தி கண்டு, என்னுள் இருந்த பத்திரிகையாளன் விழித்துக்கொண்டான்!! அந்த பதிவை இட்டவர், தனது பெயரிலேயே சாதியை உடன் ஒட்டிவைத்துள்ளார்!! உடனே, தவறுகளை சுட்டிக்காட்டி, நான் ஒரு பதிவு இட்டேன். அதற்கு, ஏராளமான பின்னூட்டங்கள்!! எது நாட்டுக்குத் தேவை இல்லையோ, எதை நாம் மறக்க முயல்கிறோமோ, அது மீண்டும், மீண்டும் பேசப்படுவதைக் கண்டு நான் மிகவும் கவலை கொண்டு, சாதி(தீ) என ஒரு பதிவு பதித்தேன், நான் என்ன சாதி என்று பரிகசித்து ஒரு கவிதையும் பதித்தேன்.

http://maraboorjc.blogspot.com/2005/11/blog-post.html

http://maraboorjc.blogspot.com/2005/11/blog-post_06.html

ஆரம்பித்துள்ளேன். பிற இணைய ஆசிரியர்களுக்கும் எனது நன்றி.

தமிழ்மணத்தால், எனக்கு பல எழுத்தாளர்கள், நண்பர்கள் ஆயினர். ஒருவரை குறிப்பிட்டு, சிலரை மறந்திடலாகாது. எல்லாரது, பாராட்டுக்கள், மற்றும் விமர்சனங்களுக்கு நன்றி.

கடைசியாக, எனது நன்றி, மதி அவர்களுக்கு. எல்லாரையும் 'மதி'க்கத் தெரிந்த நிறை'மதி' போன்ற 'மதி' கொண்டவர்! ஒரு மாதம் முன், அவரிடமிருந்து எனக்கு வந்த கடிதத்தைக் கண்டு, எனக்கு ஆச்சரியம், மகிழ்ச்சி,சந்தேகம்! நமது பதிவுகளையும் ஆசிரியக் குழு பார்க்கிறார்களா? என்று! நட்சத்திர வாரம், ஏப்ரல் முதல் தேதிக்குப்பின் வருவதால், தருமி போல் (பதிவர் தருமி இல்லை, திருவிளையாடல் தருமி!!) ஏகத்துக்கும் கேள்விகேட்டு, அவருக்கு நீண்ட கடிதம் எழுதினேன். பதில் :- "நீங்கள்தான்"- அவ்வளவே!!

எனது நன்றியுரை மிகவும் நீண்டுவிட்டது என்ன செய்ய? மதி அவர்கள் போல் ரத்தினச் சுருக்கமாக எழுத நானும் இனி முயல்கிறேன். வரும் வார பதிவுகளை படித்து நிறை, குறை இருந்தால், சுட்டிக்காட்டி, என்னை இன்னும் மெருகேறச் செய்ய உதவப் போகும் ஆயிரமாயிரம் தமிழ்மண அன்பர்களுக்கு பணிவான நன்றி.

34 comments:

ilavanji said...

வாழ்த்துக்கள் 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் ! :)

இந்த வாரம் இனிய வாரமாக அமையட்டும்!

G.Ragavan said...

வாங்க வாங்க இந்த வார நட்சத்திரமே வாங்க....

தொடக்கத்திலேயே நன்றியான்னு கேக்க மாட்டோம்....

காதலென்னும் கவிதைதனை கட்டிலில் சொன்னதற்கு நன்றிதானே தொட்டிலில் உண்டாகும் உயிரின் தொடக்கமே....

Maraboor J Chandrasekaran said...

நன்றி இளவஞ்சி. ஆரம்பத்துலயே, ப்ளாக்கர் காலையிலிருந்து மக்கர் பண்ணுது! எதோ உங்க ஆசிர்வாதம், ப்ரச்னையில்லாம வாரம் நடந்தா சரி. :-( போட்ட பதிவு, தமிழ்மணத்துல தெரியுது; ஆனா, நம்ம ப்ளாக்ல 'க்ளிக்கி'னா, ஒரு பதிவையே காணோம்!! (பம்பரம் மீதான கவிதை- சுத்திகிட்டே எங்காச்சும் ஓடிப்போச்சோ ;-)

Maraboor J Chandrasekaran said...

நன்றி, ஜி.ராகவன். கவித பின்றீங்களே? எதோ சீனியர் நட்சத்திரம்; நீங்க ஒத்துகிட்டா, எல்லாரும் ஒத்துகிட்டமாதிரிதான் :)

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் ஜெயச்சந்திரன்.

Maraboor J Chandrasekaran said...

நான் ஜெ.சந்திரசேகரன் தான்; ஜெயசந்திரன் அல்லன்; ஆனால், சமீபத்தில் மறைந்த என் தந்தை ஜெயராமன், தமிழ்ப் பிரியர்; என்வே, அவர் பெயர் வரும்படியாக, ஜெ. வை சற்றே நீட்டி, ஜெய. ஆக்கிக்கொண்டேன்!! உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி பொன்ஸ்!

சிங். செயகுமார். said...

வாழ்த்துக்கள் நட்சத்திரமே !மன்னிக்கவும் இன்றுதான் உங்கள் பதிவு பக்கம் நான்.
பத்திரிகையாளன் பார்வையில் பதிவுகள் ,கலக்குங்க தலைவா!

சிவா said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள் சந்திரசேகரன். கலக்குங்க.

அன்புடன்,
சிவா.

Maraboor J Chandrasekaran said...

சிங்.ஜெயகுமார் - சிங்கக்குட்டி ஜெயகுமாரா, இல்ல சர்தார்ஜி ஆசாமியா? :-)
வாழ்த்துக்களுக்கு நன்றி. அதுசரி, ஏன் எல்லாரும் கலக்குங்க, கலக்குங்கன்னே எழுதறாங்க? தெஇளிவா இருக்கறாது பிடிக்கலயா? அப்புறம் இந்த "தலைவா"- அது, இதுன்னு ஆரம்பிக்காதீங்க; அந்த மாதிரி போட்டு, எத்தன பேர் கால்ல மிதிப்பட்டாங்கன்னு நினைச்சா பயமா இருக்கு!
வேணாம்பா- நானும் தொண்டனாவே இருந்துர்றேன் தமிழ்த் தொண்டனாக!!

Maraboor J Chandrasekaran said...

சிவா, வாழ்த்துக்களுக்கு நன்றி. அதுசரி, ஏன் எல்லாரும் கலக்குங்க, கலக்குங்கன்னே எழுதறாங்க? எல்லாரும் தெளிவா இருக்கறது பிடிக்கலயா?

சிங். செயகுமார். said...

நண்பரே உங்கள் பெயர் விளக்கமே நமக்கும் !

Maraboor J Chandrasekaran said...

சிங்.ஜெயகுமார்- பெயர் விளக்கம் சரி. நெஞ்சத் தொட்டுட்டீங்க :-)

சிங். செயகுமார். said...

நம்ம நெஞ்சையும் தொட்டுடீங்க! பேரையே மாத்திட்டிங்களே நண்பரே!=))

Maraboor J Chandrasekaran said...

அட ஆமாம், செயகுமார்ல! 'ஜெய'போட்டதுக்கு மன்னியுங்க! என்ன நியூமராலஜியா ;-)

Muthu said...

வாழ்த்துக்கள் 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்...

தமிழாலும் தெலுங்காலும் ரொம்ப நெருங்கீட்டீங்க...வாங்க கலக்குங்க..

மலைநாடான் said...

வணக்கம் ஜெய. சந்திரசேகரன்.!
இன்றுதான் உங்கள் பக்கத்தை வாசிக்கத் தொடங்கினேன்.
இனித் தொடர்வேன்.
நன்றி!

தருமி said...

உங்களின் தன்னறிமுகம் வியப்பளிக்கிறது; கொஞ்சம் மிரட்டுகிறது.எவ்வளவு 'அகலமாய்' பாதை போட்டிருகிறீகள்!

எல்லாவற்றிற்கும் சேர்த்து ........... வாழ்த்துக்கள்.

பரஞ்சோதி said...

வாழ்த்துகள் நண்பரே!

இனிய வாரமாக அமையட்டும், உங்கள் சேவை தொடரட்டும்.

Maraboor J Chandrasekaran said...

மலைநாடன்! நல்ல பேரு. படிங்க, நன்றி. படிச்சு உங்க அபிப்ராயத்த சொல்லுங்க!

Maraboor J Chandrasekaran said...

முத்து (தமிழினி) கனக சபாபதி- நன்றி. நீங்களும் கலக்கச் சொல்றீங்க! காலைல இருந்து ப்ளாக் தான் என் வயத்த கலக்குது. எது பதிஞ்சாலும் பதிய மாட்டேங்குது. ராப்பூற முயற்சிக்கிறேன். என் நல்ல நேரம், காலைக்குள்ள பதிஞ்சா, படிச்சு படிச்சு உங்க அபிப்ராயத்த சொல்லுங்க!

Maraboor J Chandrasekaran said...

பொன்ஸ்- நன்றி. எது பதிஞ்சாலும் பதிய மாட்டேங்குது. என் நல்ல நேரம், காலைக்குள்ள பதிஞ்சா, படிச்சு படிச்சு உங்க அபிப்ராயத்த சொல்லுங்க!

Maraboor J Chandrasekaran said...

தருமி- think big என்பார்கள் ஆங்கிலத்தில். இது ஒரு முயற்சியே; ஆனால், மனப்பூர்வமானது. பலர் சேர்ந்து கனவுகளை நனவாக்குவோம்; அடுத்த உழவாரப்பணிக்கு நீங்க வர்றீங்களா? வாழ்த்துக்கு நன்றி.

Maraboor J Chandrasekaran said...

பரஞ்சோதி சித்தம்- என் சித்தம்; இறையனார் வாழ்த்தாகவே பாவித்து ஏற்கிறேன். மிக அருமையான பெயர் உங்களுக்கு; உங்கள் பெற்றோருக்கு நன்றி :) வாழ்த்துக்கு நன்றி.

thiru said...

வாழ்த்துக்கள் இந்த வார நட்சத்திரம் ஜெய.சந்திரசேகரன் அவர்களே! (எல்லாம் நம்ம நாட்டு அரசியல் மேடைகளில் கேட்ட பழக்கம் தானுங்க:))

வரும் பதிவுகளில் உங்கள் பன்முக படைப்புகள் பார்க்க ஆவலுடன்...

இரா.ஜெகன் மோகன் said...

வித்தியாசமான அறிமுகம்தான். இந்த முதலிலேயே நன்றி நவிலல்.

வாழ்த்துக்கள். கலக்குங்க மரபூர் ஜெய.சந்திரசேகரன்.

வசந்தன்(Vasanthan) said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்து.
தொடர்ந்து நல்ல பதிவுகள் தாருங்கள்.

பின்னூட்டங்கள் அதிகம் பெற வேண்டுமென்பது எல்லோருக்குமிருக்கும் ஆசைதான். போகப்போக அது குறைந்துவிடும்.

வசந்தன்(Vasanthan) said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்து.
தொடர்ந்து நல்ல பதிவுகள் தாருங்கள்.

பின்னூட்டங்கள் அதிகம் பெற வேண்டுமென்பது எல்லோருக்குமிருக்கும் ஆசைதான். போகப்போக அது குறைந்துவிடும்.

Maraboor J Chandrasekaran said...

நன்றி, திரு.திரு.அவர்களே; (தப்பா சொல்லலைங்க. முதல்ல வர்ற திரு. மரியாதை; அடுத்து வர்றது உங்க பேரு.) சே. அரசியல் பேசக்கூடாது, ஆனாலும் உங்க கிட்டயிருந்து தொத்திகிடுச்சு. பன்முக படைப்புகள்னு சொல்லிட்டீங்க; படச்சுடுவோம் :-)

Maraboor J Chandrasekaran said...

வசந்தன், நட்சத்திரமாக்கிட்டாங்கள்ல, ஞானம் வந்துடும்; பின்னூட்டமில்லைன்னாலும் பரவாயில்ல, பின்னோட்டமாயிடக்கூடாதுன்னு கவனமாயிருக்கேன்.

Maraboor J Chandrasekaran said...

இரா.ஜெகன் மோகன் - வித்தியாசமில்லாத எழுதினா, யார் பார்ப்பாங்க? அதான்; நீங்களும் கலக்கச்சொல்லிட்டீங்க, கலக்கிடுவோம்!

rv said...

வாழ்த்துகள் மரபூர் ஜெ.சி.

அறிமுகமே நன்றியுரையோடயா.. அமர்க்களம்.

சீரியஸ் மேட்டரோட வாஷிங் மஷின் மாதிரி மேட்டரும் கலந்து சித்ரான்னமா இந்த வாரம் கிடைக்கும்னு நினைக்கறேன்.

Maraboor J Chandrasekaran said...

ராமராதன்; வாழ்த்துக்கு நன்றி. எங்க ரஷியாவுல இண்டெர்நெட் வேல பாக்கலையோன்னு நினைச்சேன்; இல்ல எதாச்சும் ஆபரேஷன்ல ஏடாகூடமா மாட்டிகிடீங்களோன்னு நினச்சேன்! வயத்துல பால வார்த்தீங்க! சொன்னமாதிரி சித்திரான்னமே வெச்சாப் போச்சு! சரி, ரஷியாவுல நம்ம சாப்பாடு இல்லங்கறதும், தமிழ் புத்தாண்டு நெருங்குவதையும் நினைவு படித்திட்டீங்க!

மணியன் said...

அறிமுகமே அசத்துகிறது. பின்னணியும் பலமாயுள்ளது. இதழியலிலிருந்து மென்பொருள் வரை அனுபவம் ஆள்கிறது..இந்த வார நட்சத்திரப் படையல் பதினெட்டாம்பெருக்காக சித்திரான்னங்களுடன் சிறப்புற வாழ்த்துக்கள்!!

Maraboor J Chandrasekaran said...

கட்டாயம் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன். வாழ்த்துக்கு நன்றி, மணியன்!